
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
ஆம் நம்மால் பிறர் கூறுவதை கேட்க முடிகிறது
நம்மால் நாம் எண்ணியதை பேசி பகிர முடிகிறது
இருந்தும் நாம் பல சமயங்களில்
என் காதுகள் கேட்காமல் போனால் நல்லதாய் இருக்கும்
என் வாய் பேசாமல் போனால் நல்லதாய் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்துக் கொள்ளத் தான் வேண்டும்
ஆனால் அது அப்படி இல்லை
ஒலியற்ற உலகம் எப்படி இருக்கும்
என்று எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா
நிசப்தத்தின் உச்சத்தை உணர்ந்திருக்கிறீர்களா
உணர்ந்து இருந்தால் அப்படி எண்ணத்தோனாது
அடர்ந்த இருளில் முழ்கினால் தான் உலகம் மறையும் உங்களுக்கு
ஆனால் கண்ணை மூடினாலே உலகம் மறைந்து விடும் அவர்களுக்கு
சிறியதோர் இருளில் நிசப்தம் கண்டு அஞ்சும் நம் மத்தியில்
நிசப்தமே உலகமாய் வாழும் அவர்களை நினைத்துப் பாருங்கள்
அவர்கள் அனைத்தையும் காண்கிறார்கள்
ஆனால் காண்பனவற்றில் உள்ள ஒலியை உணர இயலவில்லை
அவர்கள் அனைத்தையும் எழுதுகிறார்கள்
ஆனால் அவர்கள் எழுத்தில் உள்ள உணர்ச்சியை வாய்விட்டு பகிர இயலவில்லை
எனவே அவ்விரண்டயுமே செய்ய இயலும் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
தான் ஈன்ற குழந்தையின் முதல் அழுகை சத்தத்தை கேட்க இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
மழழையின் அழகான மழழைச் சிரிப்பைக் கேட்டு தானாக புன்சிரிப்பு கொள்ள இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
நம்மை ஈன்ற நம் அன்னையின் குரலை கேட்க, அவள் தாலாட்டுப் பாட்டில் தூங்க இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
அவளை அம்மா என்று நம் நாவினால் அழைக்க இயலும்
நாமெல்லாம் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் தான்
நம் முகத்தை தடவிப் செல்லும் தென்றல் காற்றின் அலை ஓசையை உணர இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
குயில் எது காக்கை எது
மயில் எது மரங்கொத்தி எது
என அது எழுப்பும் ஓசையில் அறிய இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
தொடர் வண்டியின் சிகுபுகு சிகுபுகு இசையை கேட்டு மனம் குளிர்ந்து ரசிக்க இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
கடலலையின் கர்ஜனையையும் நீர்வீழச்சியின் பேரோசையையும் கேட்டு உடல் சிலிர்த்து நிற்க இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
மழைக்காலத்தில் மழைத்துளியின் தாளத்தை ரசித்து
பின் அதனுடன் வரும் இடியின் பேரோசை கண்டு அஞ்சி போர்வைக்குள் ஒழியும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
நகைச்சுவை கலந்து பேசி பிறர் மனம் புன்படாமல் சிரிக்க வைக்க இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
நாள் முழுவதும் காதுகளில் செவிப்பொறி அணிந்து பாடல்களை இசைக்க விட்டுக் கொண்டிருக்கும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
உலகிலுள்ள அனைத்து இசைக் கருவிகளின் ஒலிகளை கேட்டு
அது நரம்புக் கருவியா இல்லை துளைக் கருவியா
அது தோற்கருவியா இல்லை கஞ்சக் கருவியா
என பிரிக்க இயலும்
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்
கடிகாரத்தின் டிக்டிக்டிக் சத்தத்தின் மூலம் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியம் என உணர முடியும்
நாமெல்லாம் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் தான்

காது கேட்காத வாய் பேச முடியாத ஒருவர் எண்ணிடம் கூறியதாவது,
“எனக்கும் குரல் உண்டு
ஆனால் என்னால் அதை உன்னிடம் தான் காட்ட இயலவில்லை
நான் சிந்திக்கும் வேலையில் என்னுள் எழும் குரல்
என் குரல் தானே ?
காதுகள் கேட்காவிட்டால் என்ன
வாய் பேசாவிட்டால் என்ன
நான் விரும்பும் உயிரின்
அல்லது என்னை விரும்பும் உயிரின்
இதயத் துடிப்பை கேட்காமலே தொட்டுப்பார்த்து உணர இயலும்
நாங்களும் அவ்வகையில் அதிர்ஷ்டசாலிகள் தான்.
என்னைப் போன்று காது கேட்காத வாய் பேச முடியாதவர்க்கும் ஒரு மொழி உண்டு
சைகை மொழி என்று பெயர் அதற்கு
சைகை மொழி பேசுவது கடினம் தான்
ஆனால் கற்றுக் கொள்வது எளிது
மனதோடு மனது சேர்ந்தால் மட்டுமே புரியக் கூடிய ஒரே மொழி இது
சைகையில் பேச முயற்சி செய்துப் பார்
எவ்வளவு அழகென்று புரியும்.
உலகிலுள்ள எம்மொழியும் என் சைகை மொழியின் இனிமைக்கு ஈடாகுமா.
கையசைத்து காலசைத்து
மூக்கசைத்து முழியசைத்து பேசும்
எம்மொழியாகிய இம்மொழி நம் இதயத்தின் மொழி.
ஒலியை உணர முடியாவிட்டாலும்
ஒளியை உணரும் பாக்கியம் கிடைத்த நாங்களும்
அவ்வகையில் அதிர்ஷ்டசாலிகள் தான்.
எங்களுள் பலர் சிறந்த ஓவியர்கள்
எங்களால்
கடலின் கர்ஜனையையோ
நீர்வீழ்ச்சியின் ஆற்றலையோ
இயற்கையின் அழகையோ
மழழையின் சுட்டிச் சிரிப்பையோ
தாயின் ஆனந்தக் கண்ணீரையோ
மற்றும் பிற யாதையோ மனதார உணர்ந்து
அதே உணர்ச்சியோடு அதை ஓவியம் கொண்டு பிரதிபலிக்க இயலும்
அவ்வகையில் நாங்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்.
உயிர் என்னும் பயணச்சீட்டு பெற்று
உலகம் என்னும் ரயிலில்
இறப்பு என்னும் இலக்கை நோக்கி
வாழ்க்கை என்னும் அறிய பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்த நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்.
என்ன நாம் பயணம் புரியும் முறையும் அதில் கிடைத்துள்ள சொகுசும் தான் வேறு
மற்றபடி நாம் எல்லாரும் ஒரே இலக்கை நோக்கி தான் செல்கிறோம்
இதற்கிடையில்
உயர்தர குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்யும் சிலர்க்கு முன்பதிவு செய்யா பெட்டியில் படிக்கட்டில் நின்று காற்று வாங்கிக் கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டு செல்ல ஆசை வரும்
முன்பதிவு செய்யா பெட்டியில் பயணம் செய்யும் சிலர்க்கு குளிர்சாதனப் பெட்டியில் சொகுசாய் படுத்துக் கொண்டு செல்ல ஆசை வரும்
ஆனால் அவரவர்க்கு அவரவர் கஷ்டம்.
இருப்பினும் முன்பதிவு செய்யா பெட்டியில் பயணம் செய்யும் பலர்க்கு இலக்கை நோக்கி பயணம் செய்ய இங்காவது ஒரு சிறிய இடம் கிடைத்ததே என்ற ஒரு சந்தோஷம் நிச்சயம் இருக்கத் தான் செய்யும்.
நானும் அதில் ஒருவன் தான்.
என்னால் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்ய இயலவில்லை என்றாலும்
என் நண்பர்களிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டு
ஓ! அது இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணிக் கொள்வேன்
வாய்ப்பு என்னும் உயர்வு, பயணச்சீட்டை பரிசோதிக்கும் பரிசோதகர் மூலம் கிடைத்தால் நன்றி என்று ஏற்றுக் கொள்வேன்
இல்லை என்றால் இப்போது இருக்கும் பெட்டியில் இருக்கும் நிலையில் எவ்வளவு சொகுசாய் இருக்க முடியுமோ அவ்வளவு இருக்க முயற்சி செய்வேன் இலக்கை எட்டும் வரை.
எனவே வாழ்க்கை பயணத்தின் போது வரும், குறைகளைப் பற்றி எண்ணாமல்
அக்குறைகளில் உள்ள நிறைகளைப் பற்றி எண்ணுங்கள்
வாழ்க்கைப் பயணம் நிறையான இனிமை பயக்கும்.”.